

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் இன்று தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் காட்வின் ஜெகதீஸ்குமார், ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் சாலைகளில் சென்ற வாகனங்களின் மீது கிருமி நாசினி தெளித்தனர்.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், அவசியமின்றி வெளியில் வருவோரைத் தடுக்க, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி, தங்களது டீக்கடைகளில் கூட்டங்களை ஏற்படுத்திய கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற செயலில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் வருவதைத் தவிர்க்க, காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேவையான பொருட்களின் பட்டியல், முகவரி கொடுத்தால் காவல்துறையினரின் உதவியோடு பொருட்கள் வீடுகள் தேடி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று திருமணம், துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடும் கட்டுப்பாட்டு அறை மூலம் மேற்கொள்கின்றனர்.
இதையும் மீறி, அநாவசியமாக வெளியில் வரும் நபர்களை நிறுத்தி, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு, கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல், சமூக விலகல் போன்ற விழிப்புணர்வையும் காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர்.
தொற்று பராமல் தடுக்க, கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். கோரிப்பாளையத்தில் இன்று தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் காட்வின் ஜெகதீஸ்குமார், ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் அந்த வழியாக அத்தியவாசியத் தேவைக்குச் சென்ற வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்தனர்.
தேவையின்றி வெளியில் வருவதைத் தடுக்கவும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது போன்ற காவல்துறையினர் பணியை பொதுமக்களும் பாராட்டுகின்றனர்