

தமிழகம் முழுவதும் உள்ள செல்போன் கோபுரங்களை கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்திவந்தார். கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அங்கிருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராடும்போது அவர் உயிரிழந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் உள்ள செல்போன் கோபுரங்கள் மீது இளைஞர்கள் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான செல்போன் கோபுரங்களை கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஆட்களை நிறுத்துமாறு செல்போன் நிறுவனங்களையும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.