

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று முதல் இயங்கும் காய்கறிக் கடைகளில் சமூக இடைவெளி விட்டு நின்று பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறிக் கடைகள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் நடமாட்டம் 95 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காய்கறி வாங்குவதற்காக பெரிய மார்க்கெட்டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. பெரிய மார்க்கெட் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் மக்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியவில்லை.
இதனால் பெரிய மார்க்கெட்டை மூடிவிட்டு பல இடங்களில் கடைகளைப் பிரித்துச் செயல்படுத்த அரசு முடிவெடுத்தது. இதன்படி புதிய பேருந்து நிலையத்தில் காய்கறிக் கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. சமூக இடைவெளியுடன் கூடிய வியாபார மையமாக புதுச்சேரி பேருந்து நிலையம் மாற்றப்பட்டு இன்று (மார்ச் 31) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
இதேபோல நேருவீதி, பாரதி வீதி, மிஷன் வீதி, செஞ்சி சாலை, அஜிஸ் நகர், தட்டாஞ்சாவடி, காலாப்பட்டு அரசுப் பள்ளி ஆகிய 8 இடங்களில் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரிகள் இங்கு கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் மக்களுக்குக் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கின்றன.
ஒரு கிலோ தக்காளி ரூ.8, காலிஃபிளவர் ரூ.30, வெங்காயம் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35, கோஸ் ரூ.15, கேரட் ரூ.30, பீட்ரூட் ரூ.25, பீன்ஸ் ரூ.60, மிளகாய் ரூ.10, அவரை ரூ.40, குடை மிளகாய் ரூ.30, பூண்டு ரூ.120, இஞ்சி ரூ.100, நூக்கல் ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள கடைகளின் முன்புறப் பகுதியில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, வெள்ளை நிறத்தால் கட்டம் வரையப்பட்டுள்ளது.
இங்கு வரும் பொதுமக்கள் அந்தக் கட்டங்களில் வரிசையாக நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையாளர்களும் முகக் கவசம் அணிந்து சில அடி இடைவெளி விட்டு மக்களிடம் வர்த்தகம் செய்து வருகின்றனர். மக்கள் அதிக அளவில் கூடாதபடி கண்காணிக்க போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.