ஆஸ்திரேலியாவில் இருந்து புதுச்சேரி திரும்பிய நபர்; மருத்துவமனைக்குச் செல்லாமல் அடம் பிடித்ததால் பரபரப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அடுத்த தர்மாபுரி பகுதியைச் சேர்ந்த 47 வயது நபர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்தார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பினார். அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கரோனா அறிகுறி எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தியிருந்தனர். இதன்படி அவர் குடும்பத்துடன் வசிக்காமல், அய்யங்குட்டிபாளையத்தில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கரோனா அச்சம் காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அப்பகுதி மக்கள் யாரும் முன்வரவில்லை. இதுபற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு வருமாறு கூறினர்.

ஆனால் அவர் வர மறுத்து சிறிது நேரம் அடம் பிடித்தார். பிறகு சம்மதிக்க வைத்து அவரது காரிலேயே அவரை கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனைக்கு வரவழைத்தனர். அவருக்கு முன்னும், பின்னும் போலீஸார் தங்கள் வாகனத்தில் உடன் சென்றனர். கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி இன்று (மார்ச்-29) சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் அவருக்கு கரோனா உள்ளதா? இல்லையா? என இன்று மாலை தெரியவரும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in