கரோனா தடுப்பு சிறப்பு முகாமில் தப்பிய சிவகங்கை இளைஞர் சிக்கினார்: சிறுமியைத் திருமணம் செய்தது அம்பலம்

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம்
Updated on
1 min read

மதுரை கரோனா தடுப்பு சிறப்பு முகாமில் இருந்து தப்பிய சிவகங்கை இளைஞர், சிறுமியைத் திருமணம் செய்துள்ளார். அவனியாபுரம் போலீஸார் அவரைப் பிடித்து மீண்டும் சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர்.

துபாயில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களில் சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி வலையதாரனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவர் ஒருவர். இவர் மதுரை சின்ன உடைப்புப் பகுதியிலுள்ள கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் திடீரென அவர் மாயமானது தெரிந்தது. இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் முத்துவேல் என்பவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரில், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்ராஜ் தலைமையில் போலீஸார் பல்வேறு இடங்களில் தேடினர். அவரது செல்போன் எண்ணை வைத்துப் பின்தொடர்ந்தனர்.

சிவகங்கை அருகில் நேற்று மதியம் ஒரு பெண்ணுடன் வைத்து அவரைப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது சொந்த ஊர்ப் பகுதியில் காதலித்த பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, அவரைப் பார்க்கச் சென்றதும், நேற்று முன்தினமே அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துச் சென்று விஜய் திருமணம் செய்திருப்பதும் தெரிந்தது.

அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் அச்சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், சிவகங்கை தாலுகா போலீஸார் விஜய் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விஜய்யை அவனியாபுரம் போலீஸார் சின்ன உடைப்பு கரோனா சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர். இதற்கிடையில், விஜய் திருமணம் செய்த சிறுமி சிவகங்கை அருகே அவரது வீட்டில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in