

ஊரடங்கு உத்தரவை மீறி ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையில் சுற்றிய பொதுமக்கள் மீது கிருமி நாசினியைத் தெளித்து நகராட்சி ஊழியர்கள் விரட்டினர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாட்கள் வெளியில் வர வேண்டாம் என பிரமதர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து தமிழக அரசு சார்பிலும் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் ஏராளமான பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டது. அதையடுத்து, டிராக்டர்கள் மூலம் சாலையோரத்தில் கிருமி நாசினி தெளித்து வந்த நகராட்சி ஊழியர்கள், கடை வீதிகளில் கூடியிருந்த பொதுமக்கள் மீதும் கிருமி நாசினிகளைத் தெளித்து விரட்டினர்.
அப்போது ஒருசிலர் கோபம் அடைந்து, நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.