

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இடைக்காலமாக ரூ.200 கோடி வழங்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மார்ச்-25) சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக புதுச்சேரி அரசு சார்பில் பலகட்ட நடவடிக்கைகளை அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றோம்.
வெளிநாட்டவர் அதிகம் வரும் காரணத்தால், அவர்களில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவத் துறையினரும், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் சுமார் 24-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று நோய் இருப்பதாக சந்தேகப்பட்டு, அவர்களுடைய உமிழ்நீர் ஜிப்மருக்குக் கொண்டு சென்று பரிசோதிக்கப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சுமார் 1,200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுடைய இல்லங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
காரைக்காலில் 12 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பதை அறிந்து, திருவாரூர் மருத்துவமனையில் அவர்களுடைய உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மொத்தம் 121 பேர் வீட்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாஹேவில் 12 பேருக்கு சந்தேகத்தின்பேரில், உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. ஒருவருக்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 240 பேர் அவர்களது இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏனாம் பகுதியில் 24-க்கும் மேற்பட்டோர் வீட்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னரும் பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ளது. ஆகவே, அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று கைகூப்பி கோரிக்கை வைத்தேன். சிலர் ஏற்காமல் உலா வந்தனர். ஆகவே, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தேன்.
பிரதமர் நேற்று (மார்ச்-24) இரவு உரையில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். இன்றிலிருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
இதிலிருந்து கரோனா தொற்று தாக்கம் நம் நாட்டில் எந்த அளவுக்கு அதிகம் உள்ளது என்பது தெரிகிறது. மக்கள் பயத்தின் காரணமாக விரைந்து சென்று பொருட்களை வாங்கக் கூடாது என்று அதிகாரிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மொத்த விநியோகம் செய்பவர்களிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் இருப்பு உள்ளதாகத் தெரிவித்தனர்.
பெங்களூருவில் இருந்து காய்கறிகள் தடையின்றி வருகின்றன. பால் தடையின்றிக் கிடைக்கின்றது. மருந்து தாராளமாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருப்பு தட்டுப்பாடு உள்ளது. ஆகவே, தமிழக அரசோடு பேசி பருப்பு வகைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆகவே, மக்கள் பயத்தின் காரணமாக செல்ல வேண்டாம். தேவையான உணவுப் பொருட்களைக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல பகுதிகளுக்குச் சென்றோம். மக்கள் ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருந்தனர். ஆனால், இதுபோதாது. நகரப்பகுதி, எல்லைப்பகுதி, கிராமப்பகுதியில் இளைஞர்கள் சுற்றி வருகின்றனர்.
இன்று வரை 11 பேர் நாட்டில் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார்.
புதுச்சேரியில் அசம்பாவிதம் இல்லை என்றாலும் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. புதுச்சேரி மக்கள் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 14-ம் தேதி வரை முழுமையாக இந்தக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
சிலர் வேண்டும் என்றே வாட்ஸ் அப்பில் வதந்திகளைப் பரப்புவதால் நம்ப வேண்டாம். மத்திய அரசின் உத்தரவு மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டைத் தெரிவிப்போம். அதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஓரிரு இடங்களில் காவல்துறையினர் எல்லை மீறியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. நோயின் தாக்கம் புதுச்சேரிக்கு வந்தால் கட்டுப்படுத்த முடியாது.
புதுச்சேரி 3-ம் கட்டத்திற்குச் சென்றால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மக்களின் உயிர்தான் முக்கியம். புதுச்சேரி மக்கள் விவரம் புரிந்தவர்கள். எனவே முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே முடிவு செய்த பல திருமணங்கள் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் குறைந்த மக்களோடு திருமணத்தை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தவிட்டுள்ளேன். நாளை அதற்கான உத்தரவு வரும்.
ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ரூ.2.5 கோடி நிதியில் இருந்து 8 வென்டிலேட்டர், 17 மல்டி பராமீட்டர் மானிட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இடைக்காலமாக ரூ.200 கோடி வழங்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். மேலும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அதில் கணிசமாக தொகையைக் கேட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இன்று கடிதம் எழுதினார். மத்திய நிதி அமைச்சரிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். வைத்திலிங்கம் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சம் வழங்கியுள்ளார். அதேபோல் எம்எல்ஏக்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 சதவீதத்தை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்க வேண்டும்.
மேலும், புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் பெரிய தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கரோனா தொற்று தடுப்புக்கு நிதி தர வேண்டும். அந்த நிதிக்கு வருமான வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிதி கிடைக்கவில்லை. ஆந்திரா, தெலங்கானா அரசுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் நிதி கேட்டு கடிதம் எழுதுகின்றேன். 'கோவிட்-19 ரிலீஃப் ஃபண்ட்' என்ற கணக்கைத் தொடங்கியுள்ளேன். அதற்கு முதல் நபராக எனது நாடாளுமன்ற உறுப்பினர் பென்ஷனைத் தருகின்றேன்.
அந்தக் கணக்குக்கு பொருள், காசோலை நாளையில் இருந்து வாங்கப்படும். அதற்காக 2 பேர் பணியில் அமர்த்தப்படுவர். புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.