

கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 1,184 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புழல்-1, புழல்-2, திருச்சி, மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை, வேலூர், கடலூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் 15 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்குமாறு சிறைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த அளவிலான நிலப்பரப்புக்குள் அதிக கைதிகளைஅடைத்துள்ளதால் அவர்களுக்குஎளிதில் கரோனா வைரஸ் பரவவாய்ப்புள்ளது என்பதால் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுகுற்றங்களில் ஈடுபட்டவர்கள், நீதிமன்றங்களில் ஜாமீன்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், ஜாமீனில் அனுமதித்தால் சமூகத்துக்கு இடையூறு ஏற்படுத்தாதவர்கள் போன்றவர்களை அடையாளம் கண்டு சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை நீதித் துறை, காவல் துறை, சிறைத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.
இதற்காக, கடந்த 22-ம் தேதி மதுரையில் உயர் நீதிமன்ற கிளை நீதிபதி பிரகாசம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மைநீதிபதிகள், சிறைத் துறை கண்காணிப்பாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சிவஞானம் நேற்று முன்தினம் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையிலான குழுவினர் திருச்சி மத்திய சிறையில் நேற்று முகாமிட்டு தகுதியுடையகைதிகள் குறித்து விசாரணைமேற்கொண்டனர். அதனடிப்படையில் நேற்று மாலை வரை 23 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கேட்டபோது சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கையாக சிறைகளில் கைதிகளின் அடர்த்தியைக் குறைக்கும் வகையில் விசாரணைக் கைதிகள் மற்றும் சிறுகுற்றங்களில் ஈடுபட்டு வழக்கு நிலுவையில் உள்ள கைதிகள் தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளைச் சிறைகள், பெண்கள் சிறைகளில் உள்ள 601 பேர் என மொத்தம் 1,184 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான நடைமுறைகள் தற்போது அந்தந்த சிறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவசர சூழல் காரணமாக சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தங்களது வீடுகளில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் எனவும், எவ்விதகுற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள அனைவரையும் அந்தந்த பகுதி காவல் துறையினர் தொடர்ச்சியாக கண்காணிப்பார்கள் என்று கூறினர்.