

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மதுரை மாவட்ட எல்லைகளில் 19 சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து, பிற மாவட்ட வாகனங்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதையொட்டி மார்ச் 22-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க, துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க, 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்த மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய வாகனங்கள் தவிர, பிற மாவட்ட, மாநில வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என, அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்திற்குள் நான்கு திசைகளிலும் இருந்து நுழையும் பிற மாவட்டங்களின் வழித்தடங்களாக 19 சாலைகள் கணடறியப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைப் பகுதியான இவ்விடங்களில் சிறப்புச் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தி, சீல் வைக்கப்பட்டன.
ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தலா 2 எஸ்.ஐ தலைமையில் 20 போலீஸாரை நியமித்து காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இரவு, பகல் என, தலா ஒரு எஸ்.ஐ உட்பட 10 பேர் வீதம் சுழற்சி முறையில் பணியில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பால் உட்பட அத்தியாவசிய வாகனங்கள் தவிர, பிறமாவட்ட வாகனங்கள் எதுவும் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற பகுதியில் இருந்து மதுரைக்குள் வருவோர் தடுக்கப்படுவர்.
இது போன்ற நடவடிக்கையால் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மதுரை மக்கள் பாதுகாக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் போலீஸார் தரப்பில் கூறினர்.