

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை அளிக்கப்படும் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (மார்ச் 24) அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றிக் கவலையில்லை.
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள் காவல்துறையினரிடம் சண்டை போட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரி அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை அளிக்கப்படும். மேலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும். நாளை (மார்ச்-25) முதல் 28-ம் தேதி வரை மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும். ஆகவே, மக்கள் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நாளை முதல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.