

கரோனா வைரஸ் பற்றிய உண்மைத் தகவல்களை அறிய தமிழத்தில் முதன்முறையாக மதுரை காவல்துறை, மதுரை காவலன் செயலியில் புதிய அம்சங்களை இணைத்துள்ளது.
கரோனா வைரஸ் பற்றி பல்வேறு வதிந்திகள் பரவும் நிலையில், அதன் உண்மையான தகவல்களை அறியவும், அது தொடர்பாக அரசு வெளியிடும் தகவல்களை உடனடியாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் மதுரை மாவட்ட காவல்துறை புதிய முயற்சி மேற்கொண்டது.
அதன்படி, ஏற்கெனவே செயல்படும் மதுரை காவலன் என்ற செயலியில் சிறப்பு அம்சங்களை உருவாக்கி, இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மணிவண்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியது: இச் செயலியின் மூலம் பொதுமக்கள் கரோனா வைரஸ் சார்ந்து பரவும் செய்திகள் உண்மையா அல்லது வதந்தியா என, தெரிந்து கொள்ளலாம்.
இது மட்டுமின்றி இந்த வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் செயல்படும் உதவி மையங்கள், சோதனை மையங்களின் தொலைபேசி எண்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கரோனா வைரஸ் பற்றி அரசு வெளியிடும் அறிவிப்புகளையும் உடனுக்குடன் பார்க்கலாம். இச்செயலியில் கரோனா குறித்து வெளியிடப்படும் அனைத்துத் தகவல்களும் தமிழக அரசின் சுகாதாரத்துறை, குடும்பநலத்துறை மூலமாக பெறப்பட்டவை ஆகும்.
இவ்வசதியை பெற மதுரைக் காவலன் செயலியை ‘பிளே ஸ்டார் ’ மூலம் பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே மதுரைக் காவல செயலி பயன்படுத்துவோர் ‘பிளே ஸ்டார்’ சென்று அப்டேட் செய்யவேண்டும். இவ்வாறு எஸ்.பி கூறினார்.