

கரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மதுரையில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
7708806111 என்ற எண்ணில் மக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் இன்று காலை காவல்துறையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ஆணி விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் மாஸ்க் அணிந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக காவல்நிலையங்களை சுத்தப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. போலீஸார், வாகன தணிக்கையின் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.
"கரோனா வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் எஸ்.பி. அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, தலா ஒரு போலீஸை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று எஸ்.பி. தெரிவித்தார்.
காவல்துறையில் உள்ள அமைச்சுப் பணியாளர்களுக்கு மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்ட கரோனா தடுப்புப் பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது. ஐஜி மற்றும் மதுரை சரக டிஐஜி, மாவட்ட எஸ்.பி. ஆகியோர் இந்த உபகரணங்களை வழங்கினர்.