

திமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வகையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் மார்ச் 29 அன்று ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுக பொதுக்குழு முதன்முறையாக கூடுகிறது. இதில் அன்பழகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல், திமுகவுக்கான புதிய பொதுச் செயலாளர் தேர்வு, நிகழ்கால அரசியல், சிஏஏ, என்பிஆர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கடந்த 7-ம் தேதி காலமானார். அவர் மறைவை அடுத்து திமுகவில் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. திமுகவின் கட்சித்திட்டப்படி கட்சியின் பொதுச்செயலாளரே அனைத்து முடிவுகளை அறிவிப்பார், அனைத்து நடவடிக்கைகளும் பொதுச்செயலாளர் மூலமே எடுக்கப்படும்.
மிக முக்கியமான தலமைப்பதவியான பொதுச்செயலாளர் பதவி நீண்ட நாட்களுக்கு காலியாக இருக்கக்கூடாது என்பதால் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக திமுக பொதுக்குழு வரும் 29-ம் தேதி கூடுகிறது. இந்தப்பொதுக்குழுவில் 3000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகள், எம்பிக்கள், எம்.எல் ஏக்கள் கலந்துக்கொள்வார்கள்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், வரும் மார்ச் 29- ஞாயிற்றுக்கிழமை காலை 10 அளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் எனது தலைமையில் பொதுக்கூழு கூட்டம் நடக்கும் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
திமுகவில் அன்பழகன் மறைவுக்குப் பிறகு நடக்கும் பொதுக்குழு இதுவாகும்.