

பட்டியலினத்தவர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என அவதூறாகப் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பிப்.14 அன்று அன்பகத்தில் திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்துப் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி, பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.
இவை தவிர பட்டியலினத்தவர் குறித்தும் அவர் பேசியது சர்ச்சையானது. “ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவரை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார்.
பின்னர், நான் இன்னும் பேசினால் கண்டபடி பேசிவிடுவேன் என்றவர், பிரசாந்த் கிஷோர் எங்களுடன் இணைந்தால் அதற்கு உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது. இதெல்லாம் விவாதப்பொருளா? எனத் தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் குறித்து மிகவும் அவதூறாகப் பேசினார்.
பிப்ரவரி 14-ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் (1/2)
— RS Bharathi (@RSBharathiDMK) February 17, 2020
இவையெல்லாம் பெரும் சர்ச்சையானவுடன் தலித் சமூகம் குறித்த தனது பேச்சுக்கு ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் கொடுத்த புகாரில் தேனாம்பேட்டை உதவி கமிஷனர் எஸ்சி/எஸ்டி தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.