அதிக விளைச்சல் காரணமாக முட்டைகோஸ் கிலோ 30 பைசாவுக்குக்கூட விலை போகவில்லை: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

போதிய விலை கிடைக்காததால், சூளகிரி அடுத்த போகிபுரம் பகுதி தோட்டமொன்றில், அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ள முட்டைகோஸ்.
போதிய விலை கிடைக்காததால், சூளகிரி அடுத்த போகிபுரம் பகுதி தோட்டமொன்றில், அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ள முட்டைகோஸ்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் முட்டைகோஸ், காலி பிளவர் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் சூளகிரி, ஓசூர் பத்தலப்பள்ளி சந்தைகள் மூலம் உள் மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களான போகிபுரம், மருதாண்டப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, ஒமதேப்பள்ளி, சந்தாபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் அதிக அளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். வழக்கத்தைவிட இந்த ஆண்டில் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தற்போதுமுட்டைகோஸ் ஒரு கிலோ 30 பைசாவுக்குக்கூட வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என்கின்றனர் விவசாயிகள். இதனால், பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முட்டைகோஸ் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:

முட்டைகோஸ் 3 மாத கால பயிர். ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன. உழவுக்கூலி, நடவுப்பணி, களையெடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்டப் பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.3 முதல் 5 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.

தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் 30 பைசாவுக்குக்கூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வருவதில்லை. இதனால் விவசாயிகள் பலர் முட்டைகோஸை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு வைத்துள்ளனர்.

மேலும், செலவுத் தொகைகூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பயிர் செய்ய தேவையான விதைகள் உள்ளிட்ட செலவினங்களுக்குக்கூட வருவாய் இல்லாமல் கடும் நெருக்கடியில் உள்ளோம். முட்டைகோஸ் பயிரிட்டதில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி, இழப்பீடு பெற்றுத்தர அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in