

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமை எடுத்த முடிவு என்றும், பாஜக தலையீடு அதில் இல்லை என்றும், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி விழாவில் நேற்று (மார்ச் 9) சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஒரு ஆலமரம் போல் இருந்து கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்லும் எனத் தெரிவித்தார். மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அக்கட்சியுடன் பிளவு ஏற்படவில்லை என்றும் கூறினார். அதிமுக கூட்டணி உடையும் என்ற எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு பலிக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதில் பாஜக தலையீடு இருந்ததாக வெளியான தகவலையும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதிமுகவுக்கு யாரும் அழுத்தம் தர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
"எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் அல்ல. நாங்கள் பாரம்பரியமிக்க கட்சி. எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது, கழுத்தை நெரிக்க முடியாது. சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் பெற்ற கட்சி அதிமுக" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.