

எடப்பாடி பழனிசாமிதான் அமாவாசை. ஓ.பன்னீர்செல்வம் மனிவண்ணன் போல் இருக்கிறார். ரஜினி எந்த அமாவாசைக்குப் பின்னால் செல்லப் பார்க்கிறார்? ஒருநாளும் ரஜினி அந்த தவறைச் செய்துவிடக் கூடாது என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று (மார்ச் 8) மாலை காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 'ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"ரஜினியை ஆதரிப்பதால் எனக்கு மூளை கெட்டுவிட்டதா எனக் கேட்கின்றனர். அப்படிக் கேட்பவர்களெல்லாம் பெரிய மேதைகளா?
ரஜினி ஆட்சித் தலைமை, கட்சியின் தலைமை வெவ்வேறாக இருப்பதுதான் மாற்று அரசியல் என்கிறார். ஆனால், அவ்வாறு இருந்தால் ஏற்படும் பிரச்சினைகளை அவரிடம் விளக்கினேன். 30 நாட்கள் தாங்க மாட்டார் என்று நினைத்த எடப்பாடி பழனிசாமியை அசைக்க முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தைப் பரிதவிக்க விட்டு அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் பின்னே சென்றனர். தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓபிஎஸ் பின்னே திரும்பினால் அவரின் நிழலைத் தவிர யாரும் இல்லை. பதறிப்போய் அவரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்றுவிட்டார்.
அமாவாசை என்றால் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவால் இடைக்கால முதல்வராக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் ஒருநாளும் ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததில்லை. ஆனால், சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்தார். மணிவண்ணனைப் போல் ஓபிஎஸ் இதனைப் பார்க்கிறார். 'அம்மாவின் அரசு இதனைச் செய்கிறது' என்று கூறிய ஈபிஎஸ் 'என்னுடைய அரசு இதை செய்கிறது' எனப் பேசுகிறார்.
ரஜினி எந்த அமாவாசைக்குப் பின்னால் செல்லப் பார்க்கிறார்? ஒருநாளும் ரஜினி அந்த தவறைச் செய்துவிடக் கூடாது.
இந்திரா காந்தி, எம்ஜிஆரிடம் கண்ட வேகம் விறுவிறுப்பை ரஜினியிடம் நான் காண்கிறேன். ரஜினியைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் வியப்பான நிலையில்தான் வெளியில் வருவேன். என்னுள் இருந்த ஆவணத்தை ஒரு அடி அடித்தவர் ரஜினி. ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை அவர் படித்திருக்க மாட்டார் என்றெண்ணி அவரிடம் தந்தேன். ஆனால், ஒருமணிநேரம் அவர்களின் சித்தாந்தங்கள் குறித்து அவ்வளவு அழகாக ரஜினி என்னிடம் பேசினார்".
இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.