துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

Published on

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி முதல்வராக பதவியேற்ற பழனிசாமி, அடுத்த சில தினங்களில் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஆனாலும் 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. அடுத்த 6 மாதங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர்.

இதனையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், திமுக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவரே முடிவெடுப்பார் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இன்று (மார்ச் 9) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in