Published : 08 Mar 2020 12:27 PM
Last Updated : 08 Mar 2020 12:27 PM

கரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு: கோழிப் பண்ணையாளர்கள், விவசாயிகள் வேதனை

கரோனா வைரஸ் தொடர்பாக பரவிய வதந்தியால் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு கோழி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்த உதவ வேண்டுமென்றும் கோழிப் பண்ணையாளர்கள் மற்றும்விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், கறிக்கோழி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி.ஆர்.செல்வகுமார் தலைமை வகித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கோழிப் பண்ணைத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த நிலையில், கரோனா வைரஸ் தொடர்பாக அண்மையில் பரவிய வதந்தியால் கறிக்கோழி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 40 சதவீதம் விற்பனை மற்றும் உற்பத்தி குறைந்துவிட்டது. தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ரூ.500 கோடி அளவுக்கு உற்பத்தி மற்றும் விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் கறிக்கோழி விலையும் வெகுவாகக்குறைந்து விட்டது. ஒரு கோழியை வளர்க்க ரூ.80 வரை செலவாகும் நிலையில், கடந்த சில நாட்களாக ரூ.20 முதல் ரூ.25 மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதற்கும் கோழிக்கறிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய கால்நடைத் துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர், கால்நடைத் துறை அமைச்சர் ஆகியோர் அறிவித் துள்ள போதிலும், சில விஷமிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். கோழி, முட்டை, மீன் ஆகியவற்றின் மூலம் கரோனா வைரஸ் பரவாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும்பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு சார்பில் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x