

பெட்ரோல் பங்குகளில் கூடுதலாக அஞ்சல் பெட்டிகளை வைக்க சென்னை மண்டல அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.
இ-மெயில், வாட்ஸ் அப் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதங்களை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் அவசரமாக ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்றால் அஞ்சல் பெட்டியை தேடி அலையவேண்டி உள்ளது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் அஞ்சல் பெட்டிகளை எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம், அவற்றை பெட்ரோல் பங்குகளில் வைக்கும் திட்டத்தை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை செயல்படுத்தியது.
பொதுமக்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு உள்ளதால், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:
சென்னை போன்ற மாநகரங்களில் பெட்ரோல் பங்குகள் இட அடையாளமாக உள்ளன. ஆகவே, அங்கு அஞ்சல் பெட்டிகளை வைக்கும் திட்டத்தை சென்னை, செங்கல்பட்டு, உட்பட 8 இடங்களில் செயல்படுத்தினோம். சென்னையில் திருவான்மியூர், வியாசர்பாடி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் பங்குகளில் சில மாதங்களுக்கு முன்பு அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டன. அவற்றை வைத்த பிறகு கடிதப் போக்குவரத்து எப்படி உள்ளது என்பது தொடர்பாக அஞ்சலர்களிடம் விசாரித்தோம்.
அப்போது வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் வரை அதிக கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுவதாக அவர்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை விரிவாக்கும் நோக்கில் 100-க்கும் அதிகமான பெட்ரோல் பங்குகளில் அஞ்சல் பெட்டிகளை வைக்க அனுமதி கேட்டுள்ளோம். கூடுமான வரை எல்லா பெட்ரோல் பங்குகளிலும் ஓரிரு மாதங்களில் அஞ்சல் பெட்டிகளை இடம்பெறச் செய்வோம். பெட்ரோல் பங்குகளில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், மிரட்டல் கடிதங்களை அனுப்பும் சமூக விரோதிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.