

நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான மலர்க் கண்காட்சி மே மாதம் 15,16,17,18 மற்றும் 19-ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இதில் முக்கியமாக ரோஜா காட்சி, மலர்க் கண்காட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவை அடங்கும். உதகை மலர்க் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது என்பதால் மலர்க் கண்காட்சியைக் காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
மலர்க் கண்காட்சி நடக்கும் மூன்று நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மலர்க் கண்காட்சியைக் கண்டு ரசித்துச் செல்வார்கள்.
இந்த ஆண்டு 124-வது மலர்க் கண்காட்சி நடக்கிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் தோட்டக்கலைத்துறை ஆணையர் என்.சுப்பையன் தலைமையில் உதகையில் இன்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தோட்டக்கலைத்துறை ஆணையர் என்.சுப்பையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்த ஆண்டு கோடை விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 15, 16, 17, 18 மற்றும் 19-ம் தேதிகளில் 124-வது மலர்க் கண்காட்சியும், மே 29, 30 மற்றும் 31-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே 8,9 மற்றும் 10-ம் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, கோத்திகிரி நேரு பூங்காவில் மே மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் 11-வது காய்கறிக் கண்காட்சியும், மே மாதம் 22,23 மற்றும் 24-ம் தேதிகளில் கூடலூரில் 9-வது வாசனை திரவியக் கண்காட்சியும் நடக்கிறது.
கோடை விழா சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. காட்சிகளில் இடம்பெறும் சிறப்பு அலங்காரங்கள் குறித்து ஆலோசித்து, முடிவு செய்யப்படும்'' என்றார்.