

தமிழகத்தில் கரோனா நோய் இதுவரை வரவில்லை. அந்த பயம் நமக்குத் தேவையில்லை என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அருகேயுள்ள போலுப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அடிக்கல் நாட்டிய பிறகு முதல்வர் பழனிசாமி கரோனா வைரஸ் குறித்துப் பேசியதாவது:
''கரோனா வைரஸ் குறித்து உலகமே அஞ்சும் நிலை வருகிறது. சீனா போன்ற நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் சில நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு யாருக்கும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், நோய் தடுப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவமனைகளை ஆயத்த நிலையில் வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் இதுபற்றி அச்சப்படத் தேவையில்லை, என்றாலும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்வதன் மூலமும், சளி, இருமல் பாதிக்கப்பட்டவர்கள் கைக்குட்டை, முகக்கவசம் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் இதுபோன்ற தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏதாவது ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கரோனா நோய் இதுவரை வரவில்லை. அந்த பயம் நமக்குத் தேவையில்லை. இருந்தாலும், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க
வேண்டுமென்பதற்காக இதை நான் தெரிவிக்கின்றேன். அதேபோல, இதுபற்றி எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் பற்றி ஆய்வை நானும் நேரடியாக மேற்கொள்ள உள்ளேன். எனவே பொதுமக்கள், தனிநபர் சுகாதாரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் தரவேண்டும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.