

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அமைச்சர் நமச்சிவாயம். புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் மாநில காங்கிரஸ் தலைவராக 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி 2016 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது. முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவருக்குக் காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக பொதுப்பணித்துறையும் ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி கடைபிடிக்கப்படுகிறது. முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த நமச்சிவாயத்தை சமாதானப்படுத்தும் வகையில் அமைச்சராக பதவியேற்ற நிலையிலும், மாநிலத் தலைவர் பதவியில் தொடர கட்சித் தலைமை அனுமதித்தது.
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியை பொருத்தவரை முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஒரு பிரிவும், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் மற்றொரு பிரிவும் கோஷ்டியாக இயங்கி வந்தன. இதற்கிடையே கடந்த வாரம் அமைச்சர் நமச்சிவாயத்தை டெல்லிக்கு நேரில் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயம் திடீரென மாற்றப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 4) அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை மூலமாக தெரிவித்து உள்ளார்.
ஏற்கெனவே, புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்த சுப்பிரமணியன், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.