

புதிய ஆண்டில் ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி தொடங்குவார் என, அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அடுத்த பர்கூரில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் இன்று (பிப்.26) செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"சிஏஏவுக்கு எதிராக மக்கள் மாற்றப்பட்டு உள்ளார்கள், மக்களிடம் சகோதரத்துவம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. சிஏஏ சட்டம் குறித்து பிரதமர் மோடி சிறப்பாக செய்து வருகிறார். சில நாட்களில் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி விடும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். எதிர்க்கட்சியினரோஅல்லது யாருடைய தூண்டுதல் பேரிலோதான் டெல்லியில் கலவரங்கள் நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது நல்லது இல்லை. இது மிகவும் தவறு.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே தனது சொந்த கிராமமான நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு வந்து செல்வார். இந்த புதிய ஆண்டில் நிச்சயம் கட்சியை தொடங்குவார். கட்சி தொடங்குவது குறித்தும் கூட்டணி குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்வார்.
கட்சி தொடங்கி, வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவது குறித்து ரஜினி முடிவு செய்வார்" என சத்யநாராயண ராவ் தெரிவித்தார்.