

எந்தத் தொலைநோக்கும் இல்லாமல் மத்திய அரசு ஆட்சி நடத்துகிறது என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மகபூப்பாளையம், நெல்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியப் பெண்கள், அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உள்ளிட்டோர் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆதரவளித்துப் பேசினார்.
அப்போது அவர், "இங்கு பேராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் ஒவ்வொருவரையும் நான் தாயாகவேப் பார்க்கிறேன். கணவர் இழந்தால் வெள்ளைச் சேலை அணிந்து முடங்கிக் கிடக்கவேண்டும் என்ற மூடப்பழக்கம் இருந்த காலத்திலேயே வாளும், வேலும் ஏந்திய வீரமங்கை வேலுநாச்சியாராக இவர்களைக் கருதுகிறேன்.
ஆட்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க, திட்டம், சட்டங்களைக் கொண்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.
ஒவ்வொன்றாகக் கவனித்தால் பாஜகவின் 6 ஆண்டு ஆட்சியில் துளியும் வளர்ச்சி இல்லை. பணம் செல்லாது என அறிவித்தார்கள். இதன்மூலம் தீவிரவாதம் ஒழிந்துவிடும், லஞ்சம், ஊழல் தடுக்கப்படும் எனக் கூறினர். அவை நடக்கவில்லை.
இளைஞர்கள், கற்றறிந்தோர்,மாணவர்கள் சிந்திக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு, பண மதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பும், சரக்கு, சேவை வரியுமே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
பாஜக ஆட்சிக்கு வரும்முன், கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவோம் என வாக்குறுதி அளித்ததே? அது நடந்ததா!
எல்லா பண நடவடிக்கையும் வங்கிப் பரிவர்த்தனை மூலமே நடக்கவேண்டும். டிஜிட்டல், மொபைல் பரிவர்த்தனை அமல்படுத்த வேண்டும் என அறிவித்தார்கள். இவற்றால் யாருக்கு லாபம்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின்னணு பரிவர்த்தனை எப்படி நடக்கும்? மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்குப் பயன்படவில்லை. எந்தத் தொலை நோக்குமின்றி பாஜக ஆட்சி நடத்துகிறது. எதற்கு எடுத்தாலும் வரி போடுகின்றனர்,
இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஏலத்துக்கு வந்துவிட்டது. இப்படியேச் சென்றால் ஒருகட்டத்தில் இந்தியாவும் ஏலத்துக்கு வரும்.
ராணுவத் தளவாடங்களிலும் அந்நிய முதலீடு வந்துவிட்டது. நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. ராணுவ கோப்புகளைப் பாதுகாக்க முடியாதவர்கள், குடியுரிமைச் சட்டத்தை எப்படி பாதுகாக்க முடியும்.
நாங்கள் போராட்டத்தைக் கைவிடத் தயாராக உள்ளோம். ஆனால், பிரதமர், அமித்ஷா, நிதி, பாதுகாப்பு அமைச்சர்கள் குடியுரிமைச் சான்றிதழ்களை வெளியிடுவார்களா?
தேசம், பாதுகாப்பு பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. மக்கள் பற்றியும், வளர்ச்சி குறித்தும் சிந்திப்பதும் இல்லை. 21-ம் நூற்றாண்டில் எடுத்த முடிவுகளில் மோசமானது ஜிஎஸ்டி என, பாஜக-வின் சுப்ரமணிய சுவாமி கூறினார். அவரது கருத்தில் உடன்படுவோம்" என்று பேசினார்.