

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக் களத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அச்சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சார்பில், கோவை ஆத்துப்பாலத்தில் நேற்று இரவு முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று (பிப்.20) ஆத்துப்பாலத்தில் காத்திருப்புப் போராட்டம் நடக்கும் களத்தில் ஒரு ஜோடிக்குத் திருமணம் நடைபெற்றது.
குனியமுத்தூரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவரின் மகன் அப்துல் கலாம் (24), கரும்புக்கடையைச் சேர்ந்த காஜாமொய்தீன் மகள் ரேஷ்மா ஷெரின் (19) ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
பின்னர் தம்பதியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கும் களத்திலேயே திருமணம் செய்துகொண்டோம். இது ஒரு புரட்சிகரத் திருமணம் ஆகும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.
மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுதப்பட்ட பதாகைகளை தம்பதியர் கைகளில் வைத்து கோஷமிட்டனர்.
தவறவிடாதீர்