

நான் புரட்சி முதல்வர் அல்ல; மக்கள் சக்தியே மகத்தான சக்தி என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, புதுச்சேரி சமூக நல வாரியம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், சமூக நீதி மற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான 2 நாள் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கத்தை ஆசிரியர்களுக்காக இன்று (பிப்.19) கல்வித்துறை வளாகத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் தொடங்கியது.
முதல்வர் நாராயணசாமி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
"புரட்சி முதல்வர் என்று என்னை இவ்விழாவில் புகழ்ந்தனர். ஒருவரை மக்கள் முதல்வர் எனக்கூறி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். யாரும் புரட்சி முதல்வர் கிடையாது; மக்கள் முதல்வர் கிடையாது. நீங்கள் நினைத்தால் நாங்கள் முதல்வர். இல்லையென்றால் முதல்வர் கிடையாது. மக்கள் சக்திதான் மகத்தான சக்தி. அதிலிருந்து யாரும் மீள முடியாது. பதவியில் இருக்கும்வரை பாராட்டுவார்கள். வெளியே சென்றுவிட்டால் திட்டுவார்கள். பதவியில் இருக்கும்போது புகழ்வதால் நான் மயங்கிவிடுவேன் என்று எண்ண வேண்டாம்.
புதுச்சேரிக்குத் திருவண்ணாமலையிலிருந்து கஞ்சா வருகிறது. எங்கு கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது என்று காவல்துறையிடம் கூறியுள்ளேன். இதனை பெண் ஒருவர் விற்பனை செய்கிறார். ரயில் மூலமாக கஞ்சாவைப் புதுவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிறிய பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்.
சிறிய பிள்ளைகளிடம் கஞ்சா பொட்டலங்களைக் கொடுத்து விற்க வைத்து கமிஷன் கொடுக்கின்றனர். பள்ளி, கல்லூரி மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய இடங்களில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக உள்ளது. பெரியார் நகர், வில்லியனூர், திருப்புவனை, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூட கஞ்சா விற்பனை நடக்கிறது. காவல்துறை 2 நாட்கள் கஞ்சாவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கின்றனர். பிறகு விட்டு விடுகின்றனர். இதனைத் தடுக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டி இருக்கிறது என டிஜிபியிடம் கூறினேன்.
கஞ்சா, குட்கா போன்றவற்றை பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் விற்பனை செய்கின்றனர். இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினேன். அதன் அடிப்படையில் நேற்று 6 கடைகளைப் பிடித்துள்ளனர். இது குறைவுதான். தற்போது மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் கஞ்சா அடிக்கின்றனர். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதல் பொறுப்பு அரசுக்கு எங்களுக்கு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள், பெற்றோருக்கு உள்ளது.
பெற்றோர்களை விட ஆசிரியர்களுடன்தான் பிள்ளைகள் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றனர். அதனால் பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். காவல்துறையை திருவண்ணாமலை வரை அனுப்பி கஞ்சா வருவதைத் தடுக்க முடுக்கி விட்டுள்ளோம்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
தவறவிடாதீர்!