அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
2 min read

அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (பிப்.19) வெளியிட்ட அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் கீரிப்பாறை, காளிகேசம், மணலோடை, குற்றியார், சிற்றார் உள்பட 9 இடங்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மேலும் 2 இடங்களில் அரசு ரப்பர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் இணைந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதாவது, தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும், 2000 ஆம் ஆண்டு முதல் பணியாற்றும் சிஎல்ஆர் தொழிலாளர்களை நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைத்ததை திரும்பப் பெறவும் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும், 01.12.2016 முதல் 30.11.2019 வரையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 கேட்கப்பட்டது. ஆனால் 27.07.2018 இல் இடைக்கால ஊதிய உயர்வாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 23 மட்டுமே வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக வனத்துறை அமைச்சகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 40 தரலாம் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனையும் வழங்குவதற்கு அரசு ரப்பர் கழக நிர்வாகம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, இது தொடர்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கத்தினர் முடிவு செய்து கடந்த இரண்டு நாட்களாக 17.02.2020 முதல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு நாளைக்கு மட்டும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பீடு ஏற்படும் எனத் தெரிவிக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4,785 ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் தொழில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் தற்போது வேலை நிறுத்தத்தில் சுமார் 2,500 பேர் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் தொழிலாளர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலை நீடித்தால் ரப்பர் தொழிலில் ஈடுபடும் நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும்.

மேலும், ரப்பர் தொழில் மூலம் நாள்தோறும் கிடைக்கக்கூடிய வருவாயும் கிடைக்காமல் இழப்பு ஏற்படும். எனவே இனிமேலும் வேலைநிறுத்தம் தொடராமல் இருக்க தமிழக அரசு உடனடியாக ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு ஏற்படுத்தித் தர முன்வர வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in