

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருவதையொட்டி, அகமதாபாத் மோதிரா மைதானத்தின் அருகே தங்கி இருக்கும் குடிசைப் பகுதி மக்கள் வெளியேற வேண்டும் என்று அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் வருகைக்கும், குடிசைவாழ் மக்களுக்கும் வழங்கப்பட்ட நோட்டீஸுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் செல்லும் பாதையில் இருக்கும் குடிசைப் பகுதிகளை மறைப்பதற்காக சுவர் எழுப்பும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி வருகிறார். அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் வரும்போது அகமதாபாத் பகுதியில் குடிசைப்பகுதிகள் ஏதும் அவர் கண்களில் தெரியக்கூடாது என்பதற்காகச் சுவர் எழுப்பும் பணியில் குஜராத் அரசு ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே மோதிரா மைதானத்தின் அருகே குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 45-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அகமதாபாத் நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸிஸ், "அகமதாபாத் நகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியில் நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகிறீர்கள். அடுத்த 7 நாட்களுக்குள் இந்த இடத்தை விட்டு அனைவரும் காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். ஏதும் பதில் தர விரும்பினால் வரும் 19-ம் தேதி 3 மணிக்குள்ளாகத் தெரிவிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதிரா மைதானத்தில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அகமதாபாத்தில் இருந்து காந்தி நகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த குடிசைவாழ் பகுதி அமைந்துள்ளது.
குடிசையில் குடியிருக்கும் ஷைலேஷ் பில்வா நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 7 நாட்களாக அதிகாரிகள் இந்தப் பகுதியில் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வருகிறோம். கடந்த காலத்தில் யாரும் எங்களை இங்கிருந்து செல்லும்படி கூறவில்லை. ஆனால், இப்போது எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக் காரணம் என்ன?
எங்களை திடீரென அனுப்பினால் நாங்கள் எங்கு செல்வது? எங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு இடத்தைக் காலி செய்யுமாறு கூறுங்கள். குழந்தைகளையும், பெண்களையும் வைத்துக்கொண்டு எங்கு செல்வது? எங்களைக் கட்டாயமாக வெளியேறக் கூறி சில அதிகாரிகள் வந்து மிரட்டுகின்றனர்" என்றார்.
அகமதாபாத் நகராட்சி துணை நிர்வாக அதிகாரி சைதன்யா ஷா நிருபர்களிடம் கூறுகையில், "அதிபர் ட்ரம்ப் வருகைக்கும் இந்த நோட்டீஸுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நகர மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் குடிசைவாழ் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மக்கள் குடியிருக்கும் பகுதி அகமதாபாத் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி. கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேபடி அவர்கள் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.