

மேலவளவு ஊராட்சித் தலைவர் உட்பட 6 பேர் கொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் 13 பேர் வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராமர், ஆண்டிச்சாமி உட்பட 13 பேர் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி முன் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் முன்விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பி.ரத்தினம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் 13 பேரும் மேலவளவில் நுழையத் தடை விதித்து, வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வில் இன்று (பிப்.18) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பி.ரத்தினம் ஆஜராகவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ள நிலையில் மனுதாரர் ஆஜராகாதது வருத்தம் அளிக்கிறது எனவும், இதனால் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை திரும்பப் பெறப்படுகிறது எனவும் கூறிய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தவறவிடாதீர்!