

டாஸ்மாக் மது வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது நல்லதல்ல. இவ்வாறு ஏன் வருகிறது என திமுக எம்எல்ஏ பேரவையில் கேள்வி எழுப்பினார். மது வருவாய் அதிகரிப்பது குறித்து அமைச்சர் தங்கமணி பதிலளித்தார்.
இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடங்கி நடந்து வருகிறது. இன்று விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ், ''வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் டாஸ்மாக் மூலம் 30,000 கோடி வருவாய் கிடைப்பதாகத் தெரிவிக்கிறீர்கள். இவ்வாறு அரசுக்கு வருவாய் வருவது நல்லதல்ல. மது விலக்கை அமல்படுத்துவோம் என்று சொன்னீர்கள். எப்போது அமல்படுத்தப்படும்?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் தங்கமணி, ''மது குடிப்பது அதிகரிப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம். திமுக ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறியது. அதனால் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.
நாங்கள் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்தோம். அதன்படி தமிழகத்தில் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் 500 கடைகளைக் குறைக்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. கடை திறக்கும் நேரமும் 2 மணிநேரம் குறைக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் இருந்தபோதும் டாஸ்மாக் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. அப்போது ஆண்டு பட்ஜெட் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது 2 லட்சமாக உயர்ந்துள்ளது. அதற்கேற்றாற்போல் மது விற்பனையும் அதிகரித்துள்ளது'' என்று பதிலளித்தார்.