ஆணவத்தின் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் திமுக விழும்: ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

ஆர்.எஸ்.பாரதி: கோப்புப் படம்.
ஆர்.எஸ்.பாரதி: கோப்புப் படம்.
Updated on
1 min read

ஆணவத்தின் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் திமுக விரைவில் விழும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி விமர்சித்துள்ளது.

சென்னையில் பிப்ரவரி 14-ம் தேதி அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, "தலித் சமுதாயத்துக்குப் பதவி கொடுத்தவர் கருணாநிதி, உயர் நீதிமன்றத்தில் 6, 7 நீதிபதிகள் ஆதி திராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" எனப் பேசினார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சுக்கு பல தரப்புகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மக்கள் நீதி மய்யமும் ஆர்.எஸ்.பாரதியையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் இது தொடர்பாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் ஆதி திராவிடர் நல அணியின் மாநிலச் செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் இன்று (பிப்.18) வெளியிட்ட அறிக்கையில், "அண்ணல் அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல, வர்ணாசிரமக் கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கை வைத்திருக்க முடியாது. அப்படியிருக்கையில் சட்டம் கொடுத்த வாய்ப்பை பிச்சை போட்டதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அந்தக் கால 'ஜமீன் தனத்தோடு' ஆணவமாகக் கருத்து கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தனது கட்சி செயலாளர் கூறிய கருத்து ஸ்டாலினுக்கு மிகச் சாதாரணமான ஒன்றாகத் தோன்றியிருப்பது வருந்தத்தக்கது. ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தால் போதுமானது என்று நினைத்திருப்பது கண்டனத்திற்குரியது.

இதேநேரத்தில் திமுகவோடு கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் செஞ்சோற்றுக்கடனால் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது. இவர்கள் குணம் எப்படியானது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே உணர வேண்டிய நேரம் இது.

குறிப்பாக, இடதுசாரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது நிதியல்ல வேறொன்று என்றும் நாளை ஆர்.எஸ்.பாரதி கூறலாம்.

மாற்றார் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய அண்ணா ஆரம்பித்த இயக்கம் ஆணவத்தின் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும்" எனத் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in