

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையையொட்டி 5,400 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 585 பேருந்துகளும், நாளை 1255 பேருந்துகளும், நாளை மறுநாள் 1030 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 650 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 240 பேருந்துகளும், நாளை மறுநாள் 240 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 105 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அதேபோல், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 110 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
மேலும், செப்.15ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 765 சிறப்புப் பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினங்களில் பயணம் மேற்கொள்ள இன்றைய தினம் 8,666 பயணிகளும், நாளை 32,171 பயணிகளும், நாளை மறுநாள் 18,772 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 11,177 பயணிகள் மற்றும் திங்கள் கிழமை 23,740 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.