

சிஏஏவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக அரசு சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (பிப்.15) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகள் போராடி வருகின்றன. அப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு எதிராகவும் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் போராடி வருகின்றனர். இதில் பெண்களும் பங்கேற்று வருகின்றனர். இப்போராட்டம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் முழுவதும் பரவி வருகிறது. இப்போராட்டங்களுக்கு இடதுசாரி கட்சிகளும் இதர அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பழைய வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசு உடனடியாக இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக அரசு சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தவறவிடாதீர்!