சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: போலீஸார் தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கண்டனம்

பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம்
பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம்
Updated on
1 min read

சிஏஏவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியதாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அந்தப் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டது. 50-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களை வாகனத்திலும் வைத்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இத்தகைய வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றேன். மேலும், எஸ்டிபிஐ கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீதும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரிமையைக் காக்கும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைச் சீர்குலைப்பதை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நியாமான போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுத்து நிறைவேற்ற வேண்டும்" என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in