

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு மண்டல இணை கமிஷனர் கபில்சிபில்குமார், பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தியதில் இஸ்லாமிய அமைப்பினர் ஒருசிலர் கலைந்து சென்றதாகவும் ஆனால் ஒரு சிலர் அந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிகிறது.
இதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இதற்கு சென்னை மாநகர போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய்த் தகவலை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.