

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் இரண்டு நபர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி பெற்றது செல்லும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து , தேவிக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பிரியதர்ஷினி தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தனது வாதத்தில், “திரும்பவும் வாக்கு எண்ணிய பிறகு பிரியதர்ஷினி வெற்றி பெற்றுள்ளார் என முடிவு தெரிந்த பின்னரே வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், அதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
தேவி தரப்பு மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் தனது வாதத்தில், “ஒரு முறை முடிவு செய்யப்பட்டு வெற்றிச் சான்றிதழ் முதலில் வழங்கப்பட்டு விட்டதால், அதைத் திரும்பப் பெற முடியாது” என வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரியதர்ஷினி தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், “1000 வாக்குகளுக்கு மேல் எண்ணவில்லை. மேலும் முதலில் தேவிக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் முத்திரை கூட இல்லை. எனவே அது திரும்பப் பெறப்பட்டது. எனவே முதலில் வழங்கிய சான்றிதழ் அதிகாரபூர்வமானது அல்ல.
மேலும், எண்ணப்படாத வாக்குகளை எண்ணிய பின்னர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றார். அப்படி இருக்கும்போது முதலில் கொடுக்கப்பட்ட வெற்றிச் சான்றிதழ் தானாகவே செல்லாதது ஆகிவிடும்” என வாதிட்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தரப்பில், வாக்குகளை எண்ணும் முன்னரே சான்றளித்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
தேவி தரப்பு மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் தனது வாதத்தில், ''தேர்தல் அதிகாரி முதலில் வழங்கப்பட்ட சான்றிதழே செல்லுபடியாகும், தேர்தல் அதிகாரியின் முடிவை மாற்ற முடியாது'' என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாங்கள் முழுமையாகக் கேட்டு, அதன் பின்னரே முடிவெடுக்க முடியும். எனவே, தற்போதைய நிலையில், தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், பதவி ஏற்கவும் தடை விதிக்கிறோம்'' என உத்தரவிட்டனர்.
இந்த மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தேவியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
பின்னணி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலைக் கோட்டையைச் சேர்ந்த தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ''சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஜனவரி 3-ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது
இதைத் தொடர்ந்து தான் வீட்டுக்குச் சென்ற நிலையில், அன்று அதிகாலை 5 மணி அளவில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் அரசியல் கட்சியினரின் அழுத்தமும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பிரியதர்ஷினி பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்காலத் தடை விதித்தது. மேலும் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது. ஏனெனில் தேர்தல் அதிகாரி முதலில் வழங்கிய சான்றிதழ் தான் செல்லுபடியாகும். தேர்தலில் வெற்றிச் சான்றிதழ் வழங்கியதோடு தேர்தல் அதிகாரியின் பணி முடிந்து விட்டது. அடுத்த சான்றிதழ் வழங்க அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தது.
இதனையடுத்து, காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி பெற்றது செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.