Published : 14 Feb 2020 03:13 PM
Last Updated : 14 Feb 2020 03:13 PM

தமிழக பட்ஜெட் 2020: சமூக நலன் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்காக ரூ.5,935.13 கோடி நிதி ஒதுக்கீடு

சமூக நலன் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்காக 5,935.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

இதில், சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

1. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய நல்வழியில் இந்த அரசு, பாலின சமத்துவம், நீதி ஆகியவற்றை பாதுகாப்பதில் முனைப்பாகச் செயல்படுகிறது. இதன் விளைவாக, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் நலனை உறுதி செய்தல், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் நலன் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் பலனாக 2014-15 ஆம் ஆண்டில் 918 ஆக இருந்த பாலினப் பிறப்பு விகிதம், 2019 ஆம் ஆண்டில் 936 ஆக உயர்ந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்கு 140.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களினால், 2019-20 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 4,795 நபர்கள் பயனடைந்துள்ளனர். 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களுக்காக, 726.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம், 2020-21 ஆம் ஆண்டிலும் 253.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய நிறுவனம், பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்கும். சென்னையில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், மொத்தம் 13 இடங்களில் இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின் படி, 2020-21 ஆம் ஆண்டில் மகளிர் நலத் திட்டங்களுக்காக மொத்தம் 78 ஆயிரத்து 796.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. 43 ஆயிரத்து 243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்படும் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், நாள்தோறும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென, 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,863.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்வதற்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளின் ஆரம்ப கால கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,535.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. கடினமான சுற்றுச்சூழலில் பரிதவிக்கும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, அரசின் அடிப்படைக் கடமையாகும். ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித் தர இந்த அரசு முயற்சி செய்யும். தற்போது புதிதாக வகுக்கப்பட்டு வரும், தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூகப் பாதுகாப்பு இயக்ககத்திற்கு 175.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. முதியோர்களை அக்கறையுடன் கவனிப்பது நமது சமுதாயத்தின் மரபாகும். கல்வி மற்றும் பணித் தேவையின் காரணமாக இடம்பெயர்வதாலும், தனிக்குடும்ப விருப்பம் மக்களிடையே அதிகரித்து வருவதாலும், தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களில் முதியோர்கள் தனித்து விடப்படுகின்றனர். ஆதலால், தமிழக அரசு, ஜெ-பால் (J-PAL) மையத்துடன் இணைந்து, நோபல் பரிசு பெற்ற முனைவர் எஸ்தர் டஃப்லோவின் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு, முதியோர் பிரச்சினைகள் தொடர்பான நீண்ட கால ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், முதியோர் நலனுக்கான பல முன் முயற்சிகளை இந்த அரசு தொடங்கும். இதன் முன்னோட்டத் திட்டமாக, 37 மாவட்டங்களிலும் உள்ள தலா 2 வட்டாரங்களில், 37 லட்சம் ரூபாய் மொத்தச் செலவில் முதியோர் ஆதரவு மையங்களை இந்த அரசு தொடங்கும். 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலன் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்காக 5,935.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x