நடிகர் விஜய், அன்புச் செழியனின் ஆடிட்டர்கள் வருமான வரி அலுவலகத்தில் 2-வது நாளாக நேரில் ஆஜர்: ஏஜிஎஸ் நிறுவன நிர்வாகியும் ஆஜராகி விளக்கம்

நடிகர் விஜய், அன்புச் செழியனின் ஆடிட்டர்கள் வருமான வரி அலுவலகத்தில் 2-வது நாளாக நேரில் ஆஜர்: ஏஜிஎஸ் நிறுவன நிர்வாகியும் ஆஜராகி விளக்கம்
Updated on
1 min read

வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் மற்றும் அன்புச் செழியனின் ஆடிட்டர்கள் 2-வது நாளாக நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏஜிஎஸ் நிறுவன நிர்வாகியும் நேரில் விளக்கம் அளித்தார்.

கல்பாத்தி அகோரம் சகோதரர்கள் ஏஜிஎஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தை அகோரம், கணேஷ், சுரேஷ் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி அகியோர் நிர்வகித்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரூ.300 கோடி வரை லாபம் ஈட்டியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஜய், ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் சினிமா பைனான்சியரான மதுரை அன்பு என்கிற அன்புச் செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகம் என 38 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் 3 நாட்களுக்குள் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் முதல் நாள் நடிகர் விஜய் உட்பட யாரும் நேரில் ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் மாலை நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் வருமான வரித் துறை புலனாய்வு அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்றும் அவர்களின் ஆடிட்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் ஏ.ஜி.எஸ். என்ட்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் தனது ஆடிட்டருடன் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அர்ச்சனா கல்பாத்தி முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்ற பின் ஏஜிஎஸ் தயாரித்த முதல் படம் ‘பிகில்’ என்பதால் அதன் அனைத்து விவகாரங்களையும் அவரே கவனித்து வந்துள்ளார். எனவே, அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர்.

‘பிகில்’ திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், படத்துக்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு அர்ச்சனா கல்பாத்தியும், அவரது ஆடிட்டரும் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளதால் அவரும் விரைவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in