

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை ஜூன்.30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிக வரித்துறை நியமித்தது.
தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மாவட்டப் பதிவாளரான சேகர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதல் ஆனதால், அந்தப் பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அதிகாரி பதவி காலம் முடிவடைவதாலும், அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதாலும், அடுத்த ஓராண்டுக்கு புதிய சிறப்பு அதிகாரியாக பதிவுத் துறை உதவி ஐஜி மஞ்சுளாவை நியமித்து, ஜனவரி 2-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரியின் பதவிக் காலம் மார்ச் மாதம் முடிவடைவதால், தயரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.
தற்போது தமிழக அரசு மேலும் ஓராண்டுக்குச் சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 10-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது
ஜூன் 30-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி தேர்தலை நடத்துவார். தேர்தலைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால், முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில், கடந்த நான்கு தேர்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதியே தேர்தல் அதிகாரியாக நடத்தியுள்ளார். சிறப்பு அதிகாரி தேர்தல் நடத்தக் கூடாது என வாதிடப்பட்டது.
இதையடுத்து, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரியாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுகிறார். தேர்தல் அதிகாரிக்கு முழு ஒத்துழைப்பை சிறப்பு அதிகாரி வழங்க வேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஜூலை 31-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விஷால் தரப்பு வாபஸ் பெற்றது.