Published : 12 Feb 2020 01:07 PM
Last Updated : 12 Feb 2020 01:07 PM

குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறுக: திமுக மகளிர் அணி கூட்டத்தின் 7 தீர்மானங்கள்

திமுக மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டரணி - பிரச்சாரக் குழு நிர்வாகிகள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. கனிமொழி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் குடியுரிமைச் சட்டம், இட ஒதுக்கீடு விவகாரம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மகளிர் அணி மாநிலச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விஜயா தாயன்பன், மகளிர் அணித் தலைவர் காஞ்சனா கமலநாதன், மகளிர் தொண்டரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி - பிரச்சாரக்குழுவின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக:

“பொருளாதாரச் சீர்கேடு - வேலையில்லாத் திண்டாட்டம் - விவசாயிகள் படும் துன்பம் என நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய தலையாய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றை தேவையில்லாமல் கொண்டுவந்து, அதை அவ்வளவு அவசரமாக இரவிலேயே நிறைவேற்ற அவசியம் என்ன வந்தது?

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதனைச் சீர்குலைக்கும் வகையில், நிறைவேற்றப்பட்டிருக்கும் இச்சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

திமுக நடத்திய கையெழுத்து இயக்கம்

அனைத்து மக்களையும் பாதிக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) - தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) - தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்கும் பணி, ஆகியவற்றை எதிர்த்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுத்து மாபெரும் “கையெழுத்து இயக்கம்” நாடு முழுவதும் நடத்துவதென அறிவித்தார்.

அறிவித்ததோடு நிற்காமல், களத்தில் இறங்கி, பொதுமக்களிடத்தில் பேருந்தில் - ஆட்டோக்களில் பயணிப்பவர்களிடமும் நேரில் சந்தித்து கையெழுத்துகளைப் பெற்றார். ஒரு கோடி கையெழுத்து என்று அறிவித்திருந்தபோதும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, இக்கையெழுத்து இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டதின் மூலம் இதுவரை இரண்டு கோடிக்கும் மேல் கையெழுத்துகள் பெறப்பட்டன.

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மகளிர் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, இந்த அலங்கோல ஆட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார்கள். இத்தகைய ஒரு புதுமைப் புரட்சியை அறிவித்த, கனிமொழிக்கும் - கோலமிட்ட லட்சக்கணக்கான மகளிருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

புதிய கல்விக் கொள்கையைக் கைவிடுக

மத்திய நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, கல்விக் கொள்கை பற்றி மாநில கல்வித் துறையிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஏற்கெனவே, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்குப் போனது.

இந்த காரணத்தினால்தான், ‘நீட்’ தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் காரணமாக பல உயிர்களை இங்கே நாம் இழந்துள்ளோம். சம்ஸ்கிருதத்திற்கும் - இந்திக்கும் தமிழ்நாட்டில் முக்கிய இடம் கொடுப்பதற்காக, ஏற்கெனவே மத்திய அரசு பல முயற்சிகளில் இங்கே ஈடுபட்டிருக்கிறது.

எனவே மீண்டும் புதிய கல்விக் கொள்கை என்று அறிவித்து, தமிழக மாணவர்களை அல்லல்படுத்தும் வேளையில் மத்திய அரசு ஈடுபடுமானால், அதை ஏற்றுக் கொள்ளாமல் மாநில அரசு எச்சரிக்கையுடன் இருந்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தாழ்த்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட/ பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புகளிலும் - பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து, சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாகத் தாக்கல் செய்து, சமூக நீதியைக் காத்திட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஊழல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் இதுவரை இல்லாத அளவில், மிகப் பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது வெட்கக் கேடானது. தவறு புரிந்தோர், யாராக இருப்பினும், உடனடியாக விசாரணை செய்து, அவர்களுக்கு சட்டப்படியான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று அழைப்பதா?

வரலாற்று வல்லுநர்களால் சிந்து சமவெளி நாகரிகம் என்று அழைக்கப்பட்டு வருவதை, மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நாடாளுமன்றத்திலேயே “சரஸ்வதி சமவெளி நாகரிகம்” என்று வரலாற்றையே மாற்ற முயற்சித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகளை எடுத்து வைத்து, நாடாளுமன்றத்தில் முழங்கிய கனிமொழிக்கு இக்கூட்டம் தனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மார்ச்-8 மகளிர் தினம்

2020, மார்ச் 8 ஆம் நாள் திமுக மகளிர் அணியின் சார்பில், தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினத்தைச் சிறப்பாக நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x