இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட ரஜினிகாந்துக்குத் தெரியாது: தா. பாண்டியன் சாடல்

இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட ரஜினிகாந்துக்குத் தெரியாது: தா. பாண்டியன் சாடல்
Updated on
1 min read

இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட நடிகர் ரஜினிகாந்துக்குத் தெரியாது, அவர் நடிப்போடு நிறுத்திக் கொள்வது நல்லது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது என்றார்.

மேலும் இந்தியாவில் எவ்வளவு மாநிலங்கள் உள்ளன, எத்தனை நிதி ஒதுக்கப்படுகிறது என்ற எந்த விவரமும் தெரியாதவர் நடிகர் ரஜினிகாந்த், சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு வராது என்று கூற ரஜினி யார்? கடைசி குரல் கூட கொடுக்க வேண்டாம் என்றார் தா.பாண்டியன்.

“இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கு இவர் யார்? இவர் சட்டமன்ற உறுப்பினரா?, கட்சியின் தலைவரா? அவர் ஒரு நடிகர், நடிப்போடு அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.

அவருக்கு இந்தியாவில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன, இந்தியாவின் முதல் பட்ஜெட்டிலே எவ்வளவு பணம்? அவரைப் பேசச்சொல்லுங்கள் பார்ப்போம்.. யார் யாரை ஏமாற்றுவது? ஏதோ இவர் திரையில் செய்கிற சேட்டைகளைப் பார்த்து அவர் திரையுலகில் முதலிடம் பெற்றிருக்கலாம். செய்யட்டும்.

பாலாபிஷேகம் நடக்கட்டும், வாழைப்பழ அபிஷேகம் நடக்கட்டும், அரசியல் பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை. இப்போது சொல்கிறார் இஸ்லாமியர்களுக்கு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் என்று.. அவர் கடைசி குரலும் கொடுக்க வேண்டாம்.

எங்களைத் தற்காத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும். எங்களுக்குப் பாடம் சொல்லித்தர அவர் அவராகவே தன்னை ஆசிரியராக நியமித்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பது எங்களுக்குத் தெரியும். ” இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in