

வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் இணைப்பு தரும் திட்டம் முதல்கட்டமாக காரைக்கால், நாகை, திருவாரூர், ராமநாதபுரத்தில் வரவுள்ளது. அடுத்தகட்டமாக புதுச்சேரியிலும் வரவுள்ளது என்று கெயில் நிறுவன காவிரி படுகைக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமேலாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் இன்று (பிப்.7) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"வாக்கத்தான், நடைபயணத்தை வரும் 9-ம் தேதி காரைக்காலில் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடத்துகிறோம். கல்லூரியில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக www.townscript.com என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.
கெயில் நிறுவனம் 30 ஆண்டுகளாக காவிரி படுகையில் பணிபுரிந்து இருக்கிறது. மொத்தம் 276 கி.மீ. தொலைவுக்கு கேஸ் குழாய்களைப் பதித்துள்ளோம். இதில் 40 கி.மீ. தொலைவு மட்டுமே காரைக்காலில் வரும். அதையடுத்து திருவாரூர், ராமநாதபுரம் வரை இருக்கிறது. இப்பணி முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடர்ந்து 24 மணிநேரத்துக்குக் கண்காணிக்கிறோம்.
புதிதாக திட்டம் ஏதும் புதுச்சேரி, காரைக்காலில் இல்லை. பாதுகாப்பு முழுமையாக இருக்கிறது. அதேபோல் கொச்சி-பெங்களூரு எரிவாயு குழாய் பதிப்புப் பணிகள் மக்கள், அரசு அனுமதியில்லாமல் நடக்காது.
புதுச்சேரி, காரைக்காலில் வீடுகளில் குழாய் மூலம் கேஸ் இணைப்பு தரும் திட்டம் வரவுள்ளது. பெரு நகரங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் கணக்கீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனங்கள் இப்பணியைச் செய்கின்றன. கேஸ் மட்டுமே நாங்கள் தருவோம்.
முதல்கட்டமாக காரைக்கால், நாகை, திருவாரூர், ராமநாதபுரமும், அடுத்தக்கட்டமாக புதுச்சேரியிலும் வீடுகளில் குழாய் மூலம் கேஸ் இணைப்பு தரும் திட்டம் வரவுள்ளது. முதல்கட்டத் திட்டம் வரும் அக்டோபருக்குள் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கான குழாய்கள் வந்துள்ளன. இத்திட்டத்தால் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தலாம். சிலிண்டர் விலையை ஒப்பிடுகையில் குறைய வாய்ப்புண்டு".
கெயில் நிறுவன காவிரி படுகைக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமேலாளர் ஆறுமுகம் இவ்வாறு தெரிவித்தார்.
தவறவிடாதீர்