

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இரா. முத்தரசன் இன்று (பிப்.7) வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - நீலகிரி மாவட்டத்தில் யானைகள் புத்துணர்வு முகாமைத் தொடங்கி வைக்கச் சென்ற இடத்தில், தனது காலணியைக் கழட்டுவதற்கு, பழங்குடியினச் சிறுவனை “டேய் இங்க வாடா” என்று அழைத்து காலணியைக் கழட்டுமாறு கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்தச் செயல் பட்டியலின, பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். ஒரு சட்ட அத்துமீறலை அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் உட்பட யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததும் சட்ட மீறலாகும்.
இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் கூறும் விளக்கங்கள் ஏற்கத்தக்கதல்ல.
அதிகார மமதையில், சாதி ஆதிக்க ஆணவத்தோடு பழங்குடியினச் சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட மீறலை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.