

'பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' என்று சொல்லக்கூடாது. 'பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்' என்றுதான் சொல்ல வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் இன்று (பிப்.7) நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி விட்டு, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"இன்றைக்கு நடைபெற்றிருக்கும் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்துடன் நடந்தேறியிருக்கிறது. ஒரு காலத்தில் வைதீகத் திருமணத்தை புரோகிதர்களை வைத்து, சடங்கின் அடிப்படையில் நடத்துவார்கள். புரோகிதர்களுக்கு நேரம் இருக்காது. அவசர அவசரமாக வைதீக திருமணத்தை நடத்திவிட்டுச் சென்று விடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எங்களைப் போன்றவர்களுக்குத்தான் இப்போது வரவேற்பு அதிகம்.
பக்கத்தில் ஆன்மிகவாதிகள் இருக்கிறார்கள். ஆன்மிகம், இந்து மதம் என்றெல்லாம் சொல்லி திமுகவை வீழ்த்த சிலர் திட்டமிடுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
இன்றைக்கு நாட்டில் பல கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.15 நாட்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 'பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' என்று சொல்லக்கூடாது. 'பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்' என்றுதான் சொல்ல வேண்டும். 2014-ம் ஆண்டிலிருந்து இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. இதைத் தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை. இதற்கு இடைத்தரகர் ஜெயக்குமார் முக்கியக் காரணம்.
ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தானாக முன் வந்து ஆஜராக வேண்டிய அவசியம் என்ன? அங்கு தான் சூழ்ச்சி இருக்கிறது. உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
முறைகேடுகள் அமைச்சர்கள் வாயிலாக, முதல்வரின் உத்தரவுடன் நடந்திருக்கிறது என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அந்தத் துறையின் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், அப்போது உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். முறைகேடுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கொள்ளையடிப்பதிலும், முறைகேட்டில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலும் தான் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆகவே, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும், ஊழல்கள்-அக்கிரமங்கள்-கொலைகள்-கொள்ளைகள்- லஞ்சம் அனைத்தையும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் ஒன்று விடாமல் மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம். அது மட்டுமல்ல; அதற்குரிய தண்டனையையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உரியவர்களுக்குப் பெற்றுத் தருவோம்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
திருமண விழா முடிந்ததும் சென்னை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ராயபுரம் மேற்கு பகுதி, மீனாட்சியம்மன் பேட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, பொதுமக்களிடம் ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். மணமக்களிடம் ஸ்டாலின் கையெழுத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!