எழுவர் விடுதலை; பேரறிவாளனின் கருணை மனு குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை 2018-ம் ஆண்டிலேயே நிராகரித்து விட்டதாகவும், பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரைத்த நிலையில் அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தார்.

அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாளே தன்னை விடுவிக்காமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்.7) நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனுத்தாக்கல் செய்தார், அதில், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேரறிவாளனின் கருணை மனு தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதில் சட்டப்படி முடுவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 பேர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கெனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நளினி தன்னைச் சட்டவிரோதமாக சிறையில் அடைத்திருப்பதாகத் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட வாதங்களுக்காக பிப்ரவரி 12-ம் தேதி தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in