

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப் ஸ்லிப் கோழிகமுத்தியில் யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் தொடங்கியது. 48 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த முகாமில் வனத்துறையின் வளர்ப்பு யானைகள் பங்கேற்கின்றன.
உலாந்தி வனச்சரகத்தில் வனத்துறையின் யானைகள் வளர்ப்பு முகாமில் 14 ஆண் யானைகளும் 13 பெண் யானைகளும் உள்ளன. இந்த யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் ரோந்து செல்லவும், மரம் இழுத்தல், யானை சவாரி, வனத்தின் அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுதல் என பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
வனத்துறையினர் இந்த யானைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் புத்துணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இன்று (பிப்.6) தொடங்கியது. முகாமினை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தொடங்கி வைத்தார்.
கோழிகமுத்தி முகாமில் பங்கேற்ற 21 யானைகளுக்கும், வரகளியாறு முகாமில் உள்ள 6 யானைகளுக்கும் சிறப்பு உணவு, வனக் கால்நடை மருத்துவர் மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு ஆயுர்வேத மருந்துகள், அஷ்டசூரணம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "யானை புத்துணர்வு முகாம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. இம்முறை கோழிகமுத்தியில் 21 யானைகளுக்கும், வரகளியாறு முகாமில் 6 யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த 48 நாட்களும் யானைகளுக்கு ஓய்வு அளிக்கும் பொருட்டு டாப் ஸ்லிப்பில் யானை சவாரி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புத்துணர்வு முகாம் நிறைவு பெற்ற பின்னர் வழக்கம் போல் யானை சவாரி நடைபெறும்" என்றனர்.
தவறவிடாதீர்!