

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவியாக பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டையைச் சேர்ந்த தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் பதியப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட அன்று, ஜனவரி 3-ம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நான் வீட்டுக்குச் சென்ற நிலையில், காலை சுமார் 5 மணியளவில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியினரின் அழுத்தமும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பிரியதர்ஷினி பஞ்சாயத்துத் தலைவியாகப் பொறுப்பேற்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (பிப்.5) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது செல்லும். அதைத் தொடர்ந்து பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகக் கூறி பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
தவறவிடாதீர்!