அரசியல் சாசனம் வழங்கும் சம உரிமை என்ன?- ஃபாஸ்டேக் வழக்கில் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவு

அரசியல் சாசனம் வழங்கும் சம உரிமை என்ன?- ஃபாஸ்டேக் வழக்கில் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
2 min read

ஃபாஸ்டேக் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்படுவதை எதிர்த்த வழக்கில், அரசியல் சாசனம் வழங்கும் சம உரிமை என்ன என்பதைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டணச் சலுகை வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சுங்கச் சவாடிகளில் வாகனங்கள் இடையூறின்றிக் கடக்க ஃபாஸ்டேக் எனும் முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வங்கிகள், ஆன்லைன் மற்றும் நேரடியாக ப்ரீபெய்டு முறையில் பணம் கட்டி ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கி வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது தானாகப் பணம் கழிந்துவிடும்.

இதை ஜனவரி 15 முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் ஃபாஸ்டேக் பயன்படுத்தாதவர்கள் சுங்கச்சாவடியில் இருமடங்கு கட்டணம் கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஃபாஸ்டேக் பயன்பாட்டாளர்களுக்குக் கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்பட்டது.

ஃபாஸ்ட்டேக் மூலம் இருமார்க்க பயணத்திற்கு கட்டணம் செலுத்தும்போது, கட்டணச் சலுகை வழங்கி, கடந்த ஜனவரி 15-ம் தேதி மத்திய அரசு சுற்றறிக்கை பிறப்பித்தது. சுங்கச் சாவடிகளில் கட்டணத்தைப் பணமாகச் செலுத்திச் செல்பவர்களுக்கு இந்தச் சலுகை மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது பொதுநல மனுவில், “ஏற்கெனவே ஃபாஸ்டேக் நடைமுறை தொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள், சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்திச் செல்கின்றனர்.

இந்த நிலையில், ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டணச் சலுகை வழங்குவது பாரபட்சமானது என்பதால், மத்திய அரசின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும். சுற்றறிக்கையை ரத்து செய்து, பணம் கொடுத்துப் பயணம் செய்பவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சரவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மத்திய அரசின் சுற்றறிக்கை அரசியல் சாசனம் அளிக்கும் சம உரிமைக்கு எதிராக உள்ளது” என வாதிட்டார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகை வழங்குவதைப் போல, தங்களுக்கு வழங்க வேண்டும் என கோருவதற்கு உரிமையில்லை” எனத் தெரிவித்தனர். அரசியல் சாசனம் வழங்கும் சம உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் சமர்ப்பிக்க மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in