

ரஜினியின் பெற்றோர் பிறப்பிடம் எது? அவர்களது சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா? அசாமில் பாதிக்கப்படும் இஸ்லாமியர்களுக்காக ரஜினி குரல் கொடுப்பாரா? என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
போயஸ்கார்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , ''குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அத்துடன் சில அரசியல் கட்சிகள் சுய லாபத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகின்றன.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது முக்கியமான ஒன்று. அது இருந்தால்தான் உள்நாட்டவர் யார்? வெளிநாட்டவர் யார்? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
மாணவர்கள் இந்த விவரம் தெரியாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் அவர்களை அரசியல் கட்சியினர் தவறாக வழி நடத்துகின்றனர்'' எனத் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ரஜினி சொல்வது முற்றிலும் தவறு. சிஏஏ, என்பிஆர், என்சிஆர் அனைத்தையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடக்கக்கூடிய போராட்டத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள் எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்கவில்லை.
மாணவர்களின் கடுமையான எதிர்ப்பைத் தணிப்பதற்காக பாஜகவின் முகவராக இருக்கக்கூடிய ரஜினிகாந்தை மத்திய அரசு பயன்படுத்தி இருக்கிறது. மேலும், மாணவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு ரஜினிகாந்துக்கு எந்தத் தகுதியும் இல்லை. மாணவர்கள் சிகரெட் பிடிக்கக் கூடியவர்களாகவும் மது அருந்தக் கூடியவர்களாகவும் மாறுவதற்கு ரஜினியின் திரைப்படங்களே காரணம்.
என்பிஆர் என்பது அபாயகரமானது. ஒரு தனிநபரின் சொந்த விவரங்களை என்பிஆர் மூலம் சேகரித்து வாக்காளர் பட்டியல் போல வெளிப்படுத்தும் செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
மத்திய அரசு கொண்டுவரும் இந்தச் சட்டத்தால் ராணுவத்தில் பணியாற்றிய சனா உலா, இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமது அவர்களின் குடும்பத்தினர், இந்தியாவின் முதல் பெண் முதல்வராக இருந்த அன்வரா தாஹி ஆகியோருக்கு குடியுரிமை கிடைக்கப்போவதில்லை.
அவர்களுக்காகக் குரல் கொடுக்க ரஜினி தயாரா? அசாமில் பல லட்சம் இஸ்லாமியர்களைக் குடியுரிமை இல்லாதவர்களாக மாற்றக் கூடிய நிலையை எதிர்த்து ரஜினி குரல் கொடுப்பாரா? தேவையில்லாமல் மதகுருக்கள் பற்றிப் பேசும் ரஜினியின் வாயடைக்க வேண்டும்.
பாஜகவிற்காக ரஜினி இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து பேசுவது மோசமான ஒன்று. எனவே ரஜினிகாந்துக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன், ரஜினிகாந்தின் பெற்றோர் பிறப்பிடம் எது? அதற்கான சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா?”.
இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.
தவறவிடாதீர்!